×

மெட்ரோ பயணிகளுக்கு இனி ஸ்மார்ட் கார்டு கிடையாது

காஞ்சிபுரம்: மெட்ரோவில் பயணிக்க இனி ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாது என சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2015ல் மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகளை ஈர்க்கும் வகையில் மெட்ரோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

ஸ்மார்ட் கார்டு, வாட்ஸ் அப், பேடிஎம், க்யூஆர் கோடு ஆகியவை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மெட்ரோ ரயில் சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடியில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை 2026 இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய போது, இதில் பயணிப்பவர்களுக்காக ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மெட்ரோ ரயில் பயணிகளில் சுமார் 38 லட்சம் பயணிகள் இந்த ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை மெட்ரோ ரயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

ஸ்மார்ட் பயண அட்டை இனி பயணிகளுக்கு வழங்கப்படாது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறுகையில், ‘‘மெட்ரோவில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை வழங்க உள்ளதால், ஸ்மார்ட் கார்டு விற்பனை கடந்தாண்டு நவம்பர் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட் பயண அட்டை இனி பயணிகளுக்கு வழங்கப்படாது.

பொது பயன்பாடு உள்ள நேஷனல் கார்டை ஊக்குவிப்பதற்காகவே ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க நேஷனல் கார்டை பயன்படுத்தலாம். இருப்பினும் ஏற்கனவே ஸ்மார்ட் கார்டு வைத்துள்ளவர்கள் அதனை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றார்.

The post மெட்ரோ பயணிகளுக்கு இனி ஸ்மார்ட் கார்டு கிடையாது appeared first on Dinakaran.

Tags : Metro ,Kanchipuram ,Chennai Metro Administration ,Chennai ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய...